×

விராலிமலை அருகே நம்பம்பட்டியில் மீன்பிடி திருவிழா கோலாகலம்

விராலிமலை: விராலிமலை அருகே உள்ள நம்பம்பட்டியில் பாரம்பரியம் மிக்க மீன்பிடி திருவிழா நேற்று (சனிக்கிழமை)அதிகாலை நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று ஆரவாரத்துடன் குளத்தில் இறங்கி நாட்டுவகை மீன்களை அள்ளிச்சென்றனர். விராலிமலை ஒன்றியம் நம்பம்பட்டி ஊராட்சி புரசம்பட்டியில் உள்ளது பட்டியான் பெரியகுளம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருமழையினால் நீர் நிரம்பியிருந்த இந்த குளத்தின் தண்ணீர் தற்போது வெளுத்து வாங்கிவரும் வெயிலினால் நீர் ஆவியாக மாறி வற்றத்தொடங்கியது. இந்த நிலையில் ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி மீன்பிடி திருவிழா நடத்துவது என்று முடிவு செய்து நேற்று மீன்பிடி விழா நடத்தப்பட்டது.

முன்னதாக கிராம முக்கியஸ்தர் மற்றும் ஊர் நாட்டாண்மை சந்திரசேகர் வெள்ளை துண்டு வீசியதை தொடர்ந்து கண்மாய் கரையில் தயாராக நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வலை, கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு சிறுவர்கள், ஆண்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் மீன்களை பிடிக்க ஆரவாரத்துடன் குளத்திற்குள் இறங்கி மீன்களை பிடிக்க தொடங்கினர். இதில் நாட்டுவகை மீன்களான கட்லா, விரால், ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்களை கிராம மக்கள் பிடித்துச் சென்றனர். இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து உண்பார்கள். இதேபோன்று பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடத்துவதால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Tags : Nambampatti ,Viralimalai , Fishing festival at Nambampatti near Viralimalai
× RELATED விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம்